48 பந்துகளில் 135 ரன்கள்... சையத் முஷ்டாக் அலி தொடரில் வரலாறு படைத்த ரஜத் படிதார்

சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்தியப் பிரதேச அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படிதார் பெற்றார்.
ரஜத் படிதார்
Published on: 

நியூ சண்டிகர்,

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசாம் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேச கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் குவித்தார். வெறும் 41 பந்துகளில் சதம் அடித்த அவர், இந்தத் தொடரில் மத்தியப் பிரதேச அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

41 பந்துகளில் சதம்... 13 சிக்சர்கள்

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் தடுமாறியது.

அப்போது களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதார், அசாம் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டார். மறுமுனையில் சிவாங் குமாரும் சிறப்பாக விளையாடினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தனர்.

சிவாங் குமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். மறுபுறம் தொடர்ந்து சிக்சர்களைப் பறக்கவிட்ட படிதார், வெறும் 41 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 13 சிக்சர்களுடன் 135 ரன்கள் குவித்தார்.

புதிய சாதனை

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்தியப் பிரதேச அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படிதார் பெற்றார். மேலும், ஒரே இன்னிங்சில் 13 சிக்சர்கள் விளாசி, இந்தத் தொடரில் மத்தியப் பிரதேச வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் என்ற சாதனையையும் படைத்தார்.

அவரது அதிரடியால் மத்தியப் பிரதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. இது சையத் முஷ்டாக் அலி தொடரில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதை தொடர்ந்து, இமாலய இலக்கை விரட்டிய அசாம் அணி, மத்தியப் பிரதேச பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மத்தியப் பிரதேச அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் 135 ரன்கள் விளாசிய ரஜத் படிதார், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

X