

ஹூப்ளி,
91-வது ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக் கும் இறுதிப்போட்டி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கர்நாடக அணி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கவனத்தை ஈர்த்த ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது.
கர்நாடகா அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், கருண் நாயர், கேப் டன் தேவ்தத் படிக்கல், ஆர். சமரனும், பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, வித்வாத் கவீரப்பா, வித்யாதர் பட்டீல், வைஷாக் விஜய்குமார், ஸ்ரேயாஸ் கோபாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஐம்மு-காஷ்மீர் அணியில் பேட்டிங்கில் கேப்டன் பராஸ் டோக்ரா, அப்துல் சமத்தும், பந்து வீச்சில் அகிப் நபி, சுனில் குமார், அபித் முஸ்தாக், யுத்விர் சிங்கும் வலுசேர்க்கின்றனர்.
15-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ள கர்நாடக அணி 9-வது முறையாக கோப்பையை வெல்ல குறிவைக்கும். அதே நேரத்தில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்க ஜம்மு-காஷ்மீர் மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இடம் பெற்று இருப்பது கர்நாடக அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.