

புதுடெல்லி,
92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் குரூப்பில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் தமிழ்நாடு- ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (டி பிரிவு) ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 98.4 ஓவர்களில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 81 ரன்கள் சேர்த்தார்.
ராஜஸ்தான் தரப்பில் அஜய்சிங் 5 விக்கெட் வீழ்த்தி னார்.
இதைத்தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜ்கோட்டில் நடக்கும் சவுராஷ்டிராவுக்கு (பி பிரிவு) எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த சத்தீஷ்கார் அணி 312 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மயங்க் வர்மா 68 ரன்கள் எடுத்தார். சவுராஷ்டிரா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். 80 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.