டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் உலகின் சிறந்த பவுலர் - சாய் கிஷோர்


டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் உலகின் சிறந்த பவுலர் - சாய் கிஷோர்
x

Image Courtesy: @IPL / @gujarat_titans

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 90 ரன்னும், சாய் சுதர்சன் 52 ரன்னும் எடுத்தனர்.

கில் - சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தியது. தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 50 ரன் எடுத்தார்.

குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்னர் குஜராத் வீரர் சாய் கிஷோர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிட்ச்சில் போதுமான அளவுக்கு உதவி கிடைத்தது. அதிலும் நாங்கள் பவுலிங் செய்த இரண்டாவது இன்னிங்ஸில் நிறைய உதவி கிடைத்தது.

அது போன்ற ஆடுகளத்தில் 199 என்பது கட்டுப்படுத்துவதற்கு போதுமான இலக்காகும். ரசலுக்கு எதிராக கொஞ்சம் கோணத்தை மாற்றி பவுலிங் செய்ததே திட்டமாக இருந்தது. அப்போது தான் விலகல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அட்டாக் செய்ய வேண்டிய நேரத்தில் நான் பந்தை காற்றில் மெதுவாக வீசி டாப் எட்ஜ் பெற முயற்சித்தேன்.

டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் உலகின் சிறந்த பவுலர். இந்தப் போட்டியில் விக்கெட்டுகளை எடுத்த அவருடைய திறனை நாங்கள் எப்போதும் சந்தேகப்பட்டதில்லை. வர்ணனையாளர்கள் அறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போதும் உலகின் நம்பர் 1 டி20 பவுலரான அவரை நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் முடிவுகளைப் பற்றி பார்க்காமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதைப் பற்றி பேசுகிறோம். இன்று பீல்டிங் துறையில் நன்றாக செயல்பட்ட நாங்கள் இன்னும் முன்னேற வேண்டிய விஷயங்களைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story