சம்பள பாக்கி.... பாக். கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஜேசன் கில்லெஸ்பி


சம்பள பாக்கி.... பாக். கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த ஜேசன் கில்லெஸ்பி
x

Image Courtesy: @TheRealPCB / File Image 

கில்லெஸ்பி டிசம்பர் 2024ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்ப கடந்த ஏப்ரல் 2024-ல் நியமிக்கப்பட்டார். 2026ம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயல்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கில்லெஸ்பி டிசம்பர் 2024ல் அந்த பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

அணியை தேர்ந்தெடுப்பது, திட்டங்களில் உள்ளீடுகளைப் பெறுதல் போன்ற விஷயங்களில் கில்லெஸ்பியின் கருத்துக்களை பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஏற்கவில்லை. அந்த வகையில் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியில் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஜேசன் கில்கெஸ்பி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து சுமார் 6 மாதங்களாகியும் தமது வேலைக்கான சம்பளப் பாக்கியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை என்று சமீபத்தில் ஜேசன் கில்லெஸ்பி விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர் ஒரு யூடியூப் பக்கத்தில் பேசியதாவது, செய்த வேலையில் இருந்து சில ஊதியத்திற்காக இன்னும் நான் காத்திருக்கிறேன். சரியான சமயத்தில் அதை சரி பார்ப்பேன். இன்னும் அது கிடைக்காதது ஏமாற்றமாக இருக்கிறது. இருப்பினும் அது விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கில்லெஸ்பியின் விமர்சனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. அதாவது விதிமுறைகள் படி தங்களிடம் 4 மாதத்திற்கு முன்பாகவே தெரிவிக்காமல் பதவியை ராஜினாமா செய்ததால் சம்பளப் பாக்கியை கொடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் வாரியம் முன்னாள் தலைமை பயிற்சியாளர் தனது நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறியதை மறுக்கிறது. ஒப்பந்தத்தின்படி, ஜேசன் கில்லெஸ்பியின் சேவைகளை பிசிபி நிறுத்தியிருந்தால், நாங்கள் அவருக்கு நான்கு மாத சம்பளத்தை வழங்க வேண்டியிருக்கும்.

முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் 4 மாத அறிவிப்பு கால அவகாசம் வழங்காமல் திடீரென தனது பதவியை விட்டு வெளியேறினார். அது ஒப்பந்த விதிமுறைகளை மீறும் விஷயமாகும். எனவே, செலுத்தப்படாத தொகை குறித்த அவரது கூற்று தவறானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story