

ஐதராபாத்,
பிளே-ஆப் சுற்றின் மிக முக்கியமான 'குவாலிபையர் 1' போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள ஆர்சிபி தயாராகி வரும் வேளையில், அணியின் நட்சத்திர பேட்டர் ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, பீல்டிங்கில் டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றபோது பெத்தேலின் இடது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் ஜூன் 4ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு, சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்புகிறார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், ஆர்சிபி நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்தாலும், ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து கம்பீரமாக ப்ளே-ஆப் சுற்றுக்கு நுழைந்தது.
பெத்தேலின் விலகல் ஆர்சிபி அணிக்கு மைனஸாக இருந்தாலும், அணியின் அதிரடி துவக்க வீரர் பில் சால்ட் காயத்தில் இருந்து குணமடைந்து முழு தகுதியைப் பெற்றுள்ளதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ப்ளே-ஆப் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.