

தோஹா,
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 தொடரில் மீண்டும் பாகிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகள் மோத வாய்ப்பு உள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் ஏ அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது. பரபரப்பான இந்தப் போட்டியில் வீரர்களிடையே வாக்குவாதம், வார்த்தைப் போர், அதிரடி ஆட்டம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய போட்டி முடிந்தாலும், இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 29-ம் தேதி தோஹாவில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் அரையிறுதியில் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டியில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மீண்டும் மோதலாம்.
இந்தியா ஏ அணியை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் ஏ அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இந்தியா ஏ அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை.
அரையிறுதிக்கு முன்னேற இந்தியா ஏ அணி, நாளை ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு வலுவாகும். அதேசமயம் பாகிஸ்தான் ஏ அணி நேபாளத்தை வீழ்த்தினால் இந்தியாவின் தகுதி உறுதியாகும்.
ஒருவேளை நேபாளம் வெற்றி பெற்றால், இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, நேபாளம் ஆகிய 3 அணிகளும் 4 புள்ளிகளைப் பெறும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி அணிகள் தீர்மானிக்கப்படும்.
தற்போது இந்தியா ஏ அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று குரூப் பி பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் +2.580 ஆக உள்ளது. நேபாள அணியின் நெட் ரன் ரேட் -2.461 என்பதால் இந்திய அணிக்கு சாதகமான நிலை உள்ளது.
எனவே, பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியை மறந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிக முக்கியம். அரையிறுதிக்கு முன்னேறினால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் சந்தித்து பதிலடி கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கலாம்.