'நோக்கம் சரி.. நேரம் தவறு' - விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர்


நோக்கம் சரி.. நேரம் தவறு - விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

தினத்தந்தி 11 May 2025 4:41 PM IST (Updated: 11 May 2025 5:01 PM IST)
t-max-icont-min-icon

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது.

இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் சீனியர் வீரர்களான இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் பெர்த் போட்டியில் சதம் அடித்தாலும் விராட் கோலியின் சமீபகால ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை தாரைவார்த்து வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை திடீரென அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்டில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முன்னாள் வீரர்களும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்று சமூக வலைதளம் மூலம் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த நேரத்தில் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று சித்து கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி ஓய்வு பெற விரும்புவது கிரிக்கெட் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஓய்வு பெற விரும்பும் நேரம் சரியற்றதாக இருக்கிறது. ஏனெனில் தற்போது நாம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கிறோம். இங்கிலாந்தில் விராட் கோலி இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக இருக்க முடியும் என்று சொல்கிறேன்.

அவரது நோக்கம் சரியானது மற்றும் உன்னதமானது. பொதுவாக பழைய விஷயங்கள் கண்டிப்பாக மாற வேண்டும் அப்போதுதான் புதிய விஷயங்கள் மகசூல் கொடுக்கும் என்று சொல்வார்கள். அந்த நோக்கத்தை விராட் கோலி சரியாக பின்பற்றுகிறார். ஆனால் நேரமும் சந்தர்ப்பமும் தற்போது பொருத்தமாக இல்லை. ஏனென்றால் இந்தியாவின் பெருமையும் கவுரவமும் கேள்விக்குறியாக உள்ளன" என்று கூறினார்.

1 More update

Next Story