

மும்பை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது தாய்மொழி தெலுங்கு என்றும், சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா ஒரு நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அப்போது, பிடித்த தென்னிந்திய நடிகர் யார் என்று போட்டியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “நானும் தென்னிந்தியர்தான். எனது தாய்மொழி தெலுங்கு” என்று பதிலளித்தார். மேலும், சிறுவயதில் தனது தாயார் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களைப் பார்த்து ரசித்ததை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பலரது திரைப்படங்களையும் பார்த்ததாக குறிப்பிட்ட ரோஹித், தற்போது பல புதிய நடிகர்கள் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினார்.
ரோஹித்தின் இந்த பேச்சு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.