ரோகித் 45 வயது வரை விளையாட வேண்டும்.. தேவைப்பட்டால் தினமும் அவரை 10 கி.மீ.... - யோக்ராஜ் சிங்

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஒரு நாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரோகித் சர்மாவால் 45 வயது வரை விளையாட முடியும் என்று இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார். ஒரு பக்கம் ரோகித்தின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம், அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது. 

தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 வருடங்களுக்கு ரோகித் சர்மா நிச்சயமாக நமக்கு தேவை. ரோகித் போன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com