முகேஷ் சவுத்ரிக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம் - சென்னை கேப்டன் ருதுராஜ்

தாயாரை இழந்த சோகத்திலும் களம் இறங்கிய முகேஷ் சவுத்ரிக்கு வெற்றியை சமர்ப்பிப்பதாக ருதுராஜ் கெய்க் வாட் கூறினார்.
முகேஷ் சவுத்ரிக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம் - சென்னை கேப்டன் ருதுராஜ்
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை புரட்டியெடுத்தது. இதில் சஞ்சு சாம்சனின் சதத் தின் உதவியுடன் (101 ரன், 54 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) சென்னை அணி நிர்ணயித்த 208 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹூசைன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 100 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் ரன் வித்தியாசத்தில் மும்பையின் மோசமான தோல்வியாக இது அமைந்தது.

3-வது வெற்றியை ருசித்த பிறகு சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு இது கடினமான சூழல். இந்த வெற்றியை நிச்சயம் அவருக்கே சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த துயரமான கட்டத்தில் இருந்து (முகேஷ் சவுத்ரியின் தாயார் மரணம்) மீண்டு வருவதற்கு மனதளவில் மிகுந்த மனஉறுதி தேவைப்படுகிறது. அவர் இந்த அணிக்காகவும், அணி உரிமையாளருக்காகவும் உடனடியாக திரும்பினார் என்று நினைக்கிறேன். எங்களுக்கும் அவர் தேவை என்பதை உணர்ந்திருந்தார். அனைத்து பெருமையும் அவரையே சாரும். அவருக்காக எப்படியாவது இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என ஆட் டத்திற்கு முன்பு கூட பேசிக் கொண்டோம்.

முதலில் பேட் செய்தால் நன்றாக இருக்கும் என உள்ளூணர்வு கூறியது. ஓரிரு ஓவர்களிலேயே ஆடுகளத்தன்மையை கணித்து விட்டோம். பந்து பேட்டுக்கு ஏதுவாக வரவில்லை. எது எப்படியோ 200 முதல் 210 ரன்கள் வரை எடுத்தால் அது சவாலான ஸ்கோராக இருக்கும் என கருதினோம். கார்த்திக் ஷர்மா (18 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (21 ரன்) ஆகியோர் எடுத்த அந்த 20 ரன்கள் கூட ஆட்டத்தின் உத்வேகத்தை தக்கவைத்துக் கொள்ள உதவியது. சஞ்சு சாம்சன் மிக அற்புதமான ஆட் டத்தை வெளிப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை எங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

நான் முன்பு குறிப்பிட்டது போல 2-வது ஆட்டத்தில் இருந்து எங்களது பந்து வீச்சில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இப்போது தான் அனைத்தும் சரியாக அமைய தொடங்கி இருக்கிறது. முகேஷ் சவுத்ரி முதல் ஓவரை வீசிய விதமும், குயின்டான் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தியதும் உத்வேகத்தை எங்கள் பக்கம் திருப்பியது. மேலும் நூர் அகமது எப்போதும் இருக்கிறார். அத்துடன் அகீல் ஹூசைன் களம் இறங்க வாய்ப்பு கிடைத்தால், அது நமக்கு ஒரு வரப்பிரசாதம். மொத்தத் தில் அனைவரும் தங்களது பணியை சரியாக செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com