

மும்பை,
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சிறுவயது நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தனது முதல் கிரிக்கெட் பேட்டுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தைப் போலவே, 49 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே பேட்டுடன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் புகைப்படத்தில் சிறுவயதில் தனது முதல் கிரிக்கெட் பேட்டைப் பிடித்தபடி நிற்கிறார். மற்றொரு புகைப்படத்தில், அதே பேட்டுடன் தற்போதைய தோற்றத்தில் அதேபோன்ற போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களுடன், “முதல் பேட்டின் கதை இது... 49 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னுடனேயே இருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.
சிறுவயதில் கிடைத்த முதல் பேட்டை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வருவதும், அதனுடன் மீண்டும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கராச்சியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் அவர் களமிறங்கியபோது அவருக்கு வயது 16 ஆண்டுகள், 205 நாட்கள் மட்டுமே.
அன்றைய தினம் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் 24 ஆண்டுகள் நீடித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், 34,357 ரன்கள் என பல சாதனைகளைப் படைத்த சச்சின், 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது அறிமுகமாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது முதல் பேட்டுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது.