

தரம்சாலா,
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், ஐபிஎல் 2026 குவாலிபையர்-1 போட்டியில் துரதிர்ஷ்டவசமான ஒரு சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
இமாசலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. கேப்டன் ரஜத் படிதார் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டம் அந்த அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத்தந்தது.
255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சாய் சுதர்சன் எதிர்பாராத விதமாக 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார்.
ஷாட் அடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவரது பேட் ஸ்டம்புகளில் பட்டதால் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற துரதிர்ஷ்டமான சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதல் முறையாக ஹிட் விக்கெட் ஆனார். தற்போது, பிளே-ஆப் போன்ற மிக முக்கியமான போட்டியிலும் அதே முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பேட்டிங்கில் தடுமாறிய குஜராத் அணியில் சாய் சுதர்சன் 14 ரன்கள், கேப்டன் சுப்மன் கில் 2 ரன்கள், ஜோஷ் பட்லர் 29 ரன்கள் மற்றும் நிஷாந்த் சிந்து 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்ற ராகுல் திவேட்டியா மட்டும் அரைசதம் அடித்து போராடினார். எனினும், பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.