சாய் சுதர்சனை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் ஆட வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Image Courtesy: X (Twitter)
Image Courtesy: X (Twitter)
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இளம் வீரரான சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

சமீப காலமாக சிறப்பான பார்மில் இருக்கும் சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் ஆட வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சாய் சுதர்சனுக்கு மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னை பொருத்தவரை சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் சரியான நேரத்தில் இந்திய அணிக்குள் வருவார் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் சாய் சுதர்சனிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. அதுமட்டும் இன்றி அனைத்து வகையான ஷாட்டுகளை விளையாடும் அளவிற்கு அவர் திறமையான வீரராக இருக்கிறார். தற்போது மனதளவில் தயாராக இருக்கும் அவர் என்னை பொறுத்தவரை மிகவும் மனம் கவர்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

எனவே அவருக்கு இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சியம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரது திறனை வெளிக்காட்டுவார். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com