

அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா 2 ரன்னிலும், ப்ரப்சிம்ரன் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கனோலி (0), ஐயர் (19), நேஹல் வதேரா (0) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி 47 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில், ஸ்டோய்னிஸ் மற்றும் ஷெட்சே இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷெட்சே அரைசதமடித்து 57 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கில் மற்றும் சுதர்சன் களமிறங்கியநிலையில், கில் 5(4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ஜாஸ் பட்லர் , சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட பவர்பிளே முடிவில் குஜராத் அணி 1 விக்கெட்டை இழந்து 58 ரன்கள் எடுத்தது.
அப்போது பட்லர் 26(22) ரன்கள் அடித்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய சிந்து 15(11) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுபுறம் நிலைத்துநின்று ஆடிய சுதர்சன் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து சுதர்சன் 57(41) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய தெவாட்டியா 2(6) ரன்களிலும், ஹோல்டர் 5(7) ரன்களிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டத்து. அந்த ஓவரை ஸ்டொய்னிஸ் வீசினார். முதல் பந்து வொய்டு செல்ல , அடுத்த பந்தை புதிதாக களமிறங்கிய அர்ஷத் பவுண்டரிக்கு தள்ளினார். 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் வாஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து அணியை வெற்றியடைய செய்தார். இதன் மூலம் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் வாஷிங்டன் சுந்தர் 40(23)* ரன்களுடனும், அர்ஷத் 8(5)* ரன்களுடனும் களத்தில் இறுந்தனர். பஞ்சாப் அதர்ப்பில் அர்ஷ்தீப் மற்றும் வைசாக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.