

மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் அணி லக்னோவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் மும்பை - பெங்களுரு அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பில் சால்ட் ஆர்சிபிக்காக தனது 5-வது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், 78 ரன்கள் இருக்கும்போது ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து மும்பை பந்துவீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். மறுமுனையில், நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்து அவுட்டானார்.
அதிரடி காட்டிய படிதார் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து வான வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 53 ரன்களில் அவுட்டானார். பின்னர் டிம் டேவிட் - ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை இமால இலக்கை நோக்கி எடுத்து சென்றனர். இறுதி ஓவரில் ஜிதேஷ் அவுட்டாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 240 ரன்கள் எடுத்தது. இதயடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்க உள்ளது.