

புதுடெல்லி,
காயமடைந்த சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் இடம்பெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 15-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் வருகிற 23-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தமிழகத்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து இடத்தை இறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த மாதம் நடந்த இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கால் பெருவிரலில் காயம் அடைந்த சாய் சுதர்சன் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததால் இந்திய அணியினருடன் இலங்கை செல்லவில்லை.
இந்த நிலையில் காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சாய் சுதர்சன் நேற்று விலகினார். அவர் காயத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், டெஸ்ட் போட்டிக்கு திரும்பும் அளவுக்கு போதுமான உடல் தகுதியை எட்டாததால் தொடர்ந்து உடல் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் சாய் சுதர்சன் இரண்டு சதம் அடித்திருந்தார்.
சாய் சுதர்சனுக்கு பதிலாக யார் அணியில் சேர்க்கப்படுவார் என்பது குறித்து தேர்வு குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏற்கனவே அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடல் தகுதியை அடையாததால் விலகியதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில், காயமடைந்த சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் இடம்பெற வாய்ப்புள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.