

சென்னை,
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி மகளிர் யு-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
ஐசிசி மகளிர் யு-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கும் நிலையில், மொத்தம் 41 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஏ பிரிவு: இந்தியா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம்
பி பிரிவு: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், சமோவா
சி பிரிவு: ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம்
டி பிரிவு: இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா, ஸ்காட்லாந்து
நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஜனவரி 22-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள டியு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
லீக் சுற்றுப் போட்டிகள் ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து தகுதிபெறும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் சிறப்பாக செயல்படும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் பிப்ரவரி 4-ம் தேதி வங்காளதேசத்தின் சட்டோகிராமில் உள்ள பிர் சிரேஷ்டா ஷாஹித் பிளைட் லெப்டினன்ட் மத்தியுர் ரஹ்மான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.
தொடரின் இறுதிப்போட்டி பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், பிப்ரவரி 7-ம் தேதி மாற்று நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 2023 மற்றும் 2025-ம் ஆண்டு மகளிர் யு-19 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில், 2027-ம் ஆண்டிலும் கோப்பையை தக்கவைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய இளம் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.