"அங்கதான் மேட்ச் கைவிட்டு போச்சு" - இங்கிலாந்திடம் தோற்றதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன 'அந்த' முக்கிய காரணம்

76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா படுதோல்வியடைந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர்
Published on

நாட்டிங்ஹாம்,

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தநிலையில், அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதியடுத்து, 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

அங்குதான் போட்டியை இழந்துவிட்டோம்

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "உண்மையை சொன்னால், எங்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடுகளத்தை பார்த்தபோது இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய பிட்ச் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் அதையும் தாண்டி, நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. பவர்பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அங்குதான் போட்டியை இழந்துவிட்டோம்" என்று கூறினார்.

மேலும், "இந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு வீரரும் அணிக்காக தங்களது பங்களிப்பை எப்படி வழங்குவது, ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுவது என்பதை சிந்திக்க வேண்டும்’’ என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com