விராட் கோலியை பார்த்து சுமித், மார்னஸ் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - பாண்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் சதம் அடித்து அசத்தினார்.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்த அவர் 2-வது இன்னிங்சில் 100 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 30-வது சதமாக இது பதிவானது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி அந்த சூழலை எவ்வாறு கணித்து விளையாடினாரோ அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் சுமித் மற்றும் மார்னஸ் லபுசாக்னே ஆகியோர் அணுக வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் உடனடியாக தவறை திருத்திக் கொண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். முதல் இன்னிங்சில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் இரண்டாவது இன்னிங்சின்போது மிகச்சிறப்பாக மீண்டும் வந்து தனது 30-ஆவது சதத்தை அடித்துள்ளார்.
விராட் கோலி எப்போதுமே அவருடைய திறன்களை உறுதியாக நம்புகிறார். அதன் காரணமாகத்தான் அவரால் மீண்டும் மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்து அற்புதமாக விளையாட முடிகிறது. விராட் கோலி அவரது திறமை மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளார்.
அதேபோன்று ஸ்டீவ் சுமித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் விராட் கோலியை போன்று அவர்களது திறமை மீது நம்பிக்கை வைத்து சூழ்நிலை பற்றி பயப்படாமல் விளையாடினால் அவர்களாலும் ரன் குவிக்க முடியும். எந்த ஒரு பெரிய தொடர்களிலுமே சாம்பியன் வீரர் போன்று விராட் கோலி விளையாட அவரது திறனும் அவர் திறன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் காரணம்" என்று கூறினார்.