

துபாய்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் லெஜண்ட் சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 19 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனாவின் மொத்த ரன்கள் 10,756 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 10,740 ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்தின் சூசி பேட்ஸை முந்திய மந்தனா, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ், 10,868 ரன்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரின் சாதனையை முறியடிக்க ஸ்மிருதி மந்தனாவுக்கு தற்போது 112 ரன்கள் மட்டுமே தேவை.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள்:
1. மிதாலி ராஜ் (இந்தியா) - 10,868 ரன்கள்
2. ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 10,756 ரன்கள்
3. சூசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 10,740 ரன்கள்
4. சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) - 10,273 ரன்கள்
5. ஸ்டாபனி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) - 10,007 ரன்கள்
இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தாய்லாந்து அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 16.1 ஓவர்களில் வெறும் 65 ரன்களுக்கு தாய்லாந்து அணி ஆல்-அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.