

டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், மந்தனா ஒரு ரன் எடுத்தபோது, இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வாழ்நாள் டி20 சாதனையான 4,231 ரன்களைக் கடந்தார். இதன் மூலம், இந்தியாவிற்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதன்மை வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.
இப்போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா (34) மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி முதல் 5 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். மந்தனா 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.