தென்னாப்பிரிக்கா தொடர்: ஜோஷ் இங்கிலிஸ் விலகல்

காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைய வேண்டியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடர்: ஜோஷ் இங்கிலிஸ் விலகல்
Published on: 

கேப்டவுன்,

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்தபோது அவரது வலது கையின் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் ஏற்பட்டபோதும் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்த இங்கிலிஸ், பின்னர் 4-வது வீரராக களமிறங்கி 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்.

இங்கிலிஸின் காயம் காரணமாக செப்டம்பர் 27-ம் தேதி ஜோகன்னஸ்பர்க் மற்றும் செப்டம்பர் 30-ம் தேதி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெறும் அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக அவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குத் திரும்புகிறார். அவரது காயம் முழுமையாக குணமடைவது குறித்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

அக்டோபர் 9-ம் தேதி டர்பனில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இங்கிலிஸ் விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அலெக்ஸ் கேரிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளதுடன், பேட்டராகவும் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைய வேண்டியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து 0–1 என பின்தங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com