மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது நோர்டியாவை தாக்கிய 'ஸ்பைடர் கேமரா'

47-வது ஓவரின் போது, பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் அந்தரத்தில் சுழன்று வரும் ஸ்பைடர் கேமரா தாக்கியது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது நோர்டியாவை தாக்கிய 'ஸ்பைடர் கேமரா'
Published on

மெல்போர்ன்,

மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டில் வாட்டிவதைத்த வெயிலோடு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவு குடைச்சல் கொடுத்தவர், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா தான்.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசி அச்சுறுத்தினார். 47-வது ஓவரின் போது, பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் அந்தரத்தில் சுழன்று வரும் ஸ்பைடர் கேமரா தாக்கியது. இடது தோள்பட்டையில் கேமரா பலமாக இடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

வலியால் அவதிப்பட்ட நோர்டியாவுக்கு நல்லவேளையாக காயம் பெரிய அளவில் இல்லை. 16 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு விக்கெட் எடுத்தார். ஆபரேட்டரின் தவறினால் கேமரா அவர் மீது மோதி விட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. அத்துடன் மேற்கொண்டு அந்த கேமரா நேற்றைய போட்டியில் பயன்படுத்தப்படவில்லை. 3-வது நாளில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களுடன் கேமரா இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து நோர்டியா கூறுகையில், 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எது என்னை தாக்கியது என்பது முதலில் தெரியாது. முழங்கையில் தான் கொஞ்சம் வீக்கம்இருக்கிறது. மற்றபடி பரவாயில்லை. ஸ்பைடர் கேமரா, வீரர்களின் தலை உயரத்துக்கு பயணிப்பது சரியில்லை என்பதே எனது கருத்து. சக வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் மிகவும் உயரமான வீரர். இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com