

கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பர்ஹானும், பகார் ஜமானும் அதிரடி காட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தது. பகார் ஜமான் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பர்கான் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் மதுஷன்கா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் பதும் நிசாங்கா மற்றும் கமில் மிசாரா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் நிசாங்கா 3 ரன்களும், மிசாரா 26 ரன்களும், அடுத்து களமிறங்கிய அசலங்கா 25 ரன்களும், கமிந்து மெண்டீஸ் 3 ரன்களும், லியானேஜ் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரத்நாயகே தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தசுன் சனகா அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடியில் ரத்நாயகே 58 (37) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் அதிரடியில் மிரட்டிய கேப்டன் தசுன் ஷனகா 76 (31) ரன்களும், வெல்லாலகே 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றும், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
முன்னதாக பாகிஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.