மகளிர் சாம்பியன்ஸ் டிராபி... இந்தியாவில் நடக்கிறதா?... இலங்கையிடம் இருந்து பறிக்கப்படுகிறதா வாய்ப்பு?

மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகளே பங்கேற்க முடியும்.
இலங்கை
Published on

கொழும்பு,

2027-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு கிடைக்குமா வாய்ப்பு?

6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், திட்டமிட்ட அதே காலகட்டத்தில் வேறு நாட்டில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, இத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த இறுதி முடிவு, அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) நிர்வாகக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது ஐசிசி தொடர்

2026-ம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இணைந்து நடத்திய பிறகு, ஓராண்டுக்குள் இலங்கை நடத்தவிருந்த இரண்டாவது ஐசிசி தொடராக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி இருந்தது. ஆனால், தற்போது தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது மட்டுமில்லாமல், அந்த அணிக்கு தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.

7-வது இடத்தில் இலங்கை

மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகளே பங்கேற்க முடியும். தற்போது இலங்கை அணி 7-வது இடத்தில் உள்ளது.

தற்போதைய முதல் 6 இடங்களில் உள்ள அணிகள்:

1. ஆஸ்திரேலியா

2. இங்கிலாந்து

3. இந்தியா

4. நியூசிலாந்து

5. தென் ஆப்பிரிக்கா

6. வெஸ்ட் இண்டீஸ்

இலங்கை அணி தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் மட்டுமே நேரடியாகத் தகுதி பெற்றிருந்தது. தற்போது தொடரை நடத்தும் உரிமை வேறு நாட்டுக்கு மாற்றப்பட்டால், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் பங்கேற்பு கேள்விக்குறியாகும்.

2-வது பின்னடைவு

கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை, ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழக்கும் நிலை ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, 2024-ம் ஆண்டு ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையும் இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com