'இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஓய்வை இலங்கை அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்' - ஜெயசூர்யா

20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஓய்வை இலங்கை அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ம் தேதி பல்லகெலேவில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெயசூர்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் லங்கா பிரிமீயர் லீக்கில் விளையாடியதால் பிசியாக இருந்தார்கள். எனவே அந்த போட்டி முடிந்த பிறகுதான் பயிற்சி முகாமை தொடங்கினோம். வீரர்கள் முடிந்த அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குனர் ஜூபின் பருச்சா எங்கள் வீரர்களுக்கு கடந்த 6 நாட்கள் பயிற்சி அளித்தார். அவரிடம் இருந்து வீரர்கள் நிறைய கற்று இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் புதிய நுட்பம், புதிய அணுகுமுறை, ஷாட் தேர்வில் திறம்பட செயல்படுதல் ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இந்த போட்டி தொடருக்காக நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்.

ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் உலகின் சிறந்த வீரர்கள். அவர்களின் திறமை, அவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும் போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் இருவரும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது இந்திய அணிக்கு இழப்பாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தற்போதைய இலங்கை அணியின் நிலை என்பது வீரர்கள் செயல்படும் விதத்தை பொறுத்ததாகும். பயிற்சி உள்ளிட்ட பெரும்பாலான வசதிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் சிறப்பாக செய்து கொடுத்து இருக்கிறது. இனிமேல் வீரர்கள் கையில் தான் எல்லாமே உள்ளது.

தற்போதைய வீரர்கள் சிறந்த நிலையை எட்டுவதற்கு தேவையான எல்லா பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். அடுத்த இரண்டு வருடத்தில் இந்த வீரர்களிடம் நிறைய முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போதைய அணி சிறப்பாக செயல்படுவதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள். விரைவில் அவர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com