5 ரன்கள்... 7 விக்கெட்டுகள்.. ஹாட்ரிக் சாதனையுடன் ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது.
5 ரன்கள்... 7 விக்கெட்டுகள்..  ஹாட்ரிக் சாதனையுடன் ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்
Published on

துபாய்,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பெண்கள் ஆசிய கோப்பை

8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

7 விக்கெட்டுகள்!

இதில் பி பிரிவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இலங்கை அணி - இந்தோனேசியாவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் இலங்கை கேப்டன் சமாரி அதபத்து 3.3 ஓவர்கள் பந்துவீசி வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆசியக் கோப்பை வரலாற்றில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளையும் சேர்த்து, ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். 19-வது ஓவரில் ஹாட்ரிக் சாதனையையும் அவர் பதிவு செய்தார்.

49 ரன்களுக்கு ஆல்-அவுட்

அதபத்துவின் இந்த அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தோனேசிய அணியின் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இலங்கை அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முந்தைய சாதனையை முறியடித்தார்

இதற்கு முன்பு ஆசியக் கோப்பை போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பதிவாக, 2008-ம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானின் ஜாவேரியா கான் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

தற்போது 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமாரி அதபத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மெண்டிஸின் சாதனை முறியடிப்பு

அத்தபத்துவின் இந்த சாதனை ஆசியக் கோப்பையுடன் நின்றுவிடவில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சுப் பதிவாகவும் இது அமைந்துள்ளது.

இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கையின் அஜந்த மெண்டிஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. தற்போது 5 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அத்தபத்து அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

2-வது கேப்டன்

சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 2-வது கேப்டன் என்ற பெருமையையும் சமாரி அதபத்து பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு அர்ஜென்டினாவின் எலிசன் ஸ்டோக்ஸ், 2022-ம் ஆண்டு பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் 3.4 ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது அவருக்கு அடுத்தபடியாக அதபத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com