

லண்டன்,
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சில கருத்தை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் இருந்து விலகிய அவர், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளெமிங்கின் நியமனம் குறித்து பேசிய மைக்கேல் வாகன்,
"பிளெமிங் மிகவும் மதிப்புமிக்க பயிற்சியாளர். ஐபிஎல் போட்டிகளில் அவருடைய பணியை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவர் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவருக்கு எம்.எஸ். தோனி போன்ற கேப்டன் இங்கு இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை களத்தில் தோனிதான் சிறப்பாக வழிநடத்தினார். மேலும், பிளெமிங்குடன் எரிக் சைமன்ஸ் போன்ற திறமையான உதவிப் பயிற்சியாளர்களும் இருந்தனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய வாகன்,
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் வேகப்பந்துவீச்சை மட்டும் நம்பாமல், ஸ்விங், துல்லியம் போன்ற பந்துவீச்சு நுட்பங்களையே அதிகமாக நம்பி கட்டமைக்கப்பட்டது. அதே அணுகுமுறை மீண்டும் இங்கிலாந்து அணியிலும் வருமா என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
53 வயதான ஸ்டீபன் பிளெமிங், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். அதுவரை மார்கஸ் டிரெஸ்கோதிக் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.