

டெல்லி,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேன்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க தவறினர். மருமணி 7 ரன்னிலும், பென்னெட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கையூட்டினார். அவர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மாபாகா, போஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேன்களாக டி காக் ரன் ஏதும் எடுக்காமலும், மார்க்ரம் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த ரிக்கல்டன் 31 ரன்களும், பிரெவிஸ் 42 ரன்களும் எடுத்தனர். மில்லர் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவரிலேயே இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.