

சென்னை,
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவின் தற்போதைய பார்ம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ராய்ப்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணிக்கு எதிரான போட்டியில், சூர்யா 'கோல்டன் டக்' (முதல் பந்திலேயே அவுட்) ஆனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சீசனின் 'மிக மதிப்புமிக்க வீரராக' வலம் வந்த அவர், தற்போது ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவே தடுமாறுவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சூர்யாவின் இரண்டாவது 'கோல்டன் டக்' இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் அணியை வழிநடத்தி வரும் சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த 'கோல்டன் டக்' மூலம், 2026 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவின் சராசரி வெறும் 17.73 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இதுவே அவரது மிக மோசமான சராசரி ஆகும்.
இதற்கு முன்னதாக 2017-ல் 17.50 சராசரியைக் கொண்டிருந்தார். அவரது கேரியரில் மிக மோசமான சராசரி 2015-ல் பதிவான 17.44 ஆகும். இந்த சீசனில் இதுவரை 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யா, வெறும் 195 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சூர்யா தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தாலும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. ஒரே ஒரு சிறப்பான இன்னிங்ஸ் மூலம் சூர்யா மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவார் என அணி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.