இந்திய அணியில் சூர்யகுமாருக்கு இனி இடமில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போதைய அணிக் கட்டமைப்பில் அவருக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யகுமார் யாதவ்
Published on: 

மும்பை,

இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமில்லாமல் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அணியில் இடமில்லையா?

இந்நிலையில், இந்திய அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரர்கள் சேர்க்கையில் தற்போது கடும் போட்டி நிலவிவருவதால், சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே அணியில் இடம் கிடைக்காத சூழலில், சூர்யகுமாரை எவ்வாறு அணியில் சேர்ப்பது என்ற நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் தொடரில் அதிரடி ஆட்டம்

இதற்கிடையே, சையத் முஷ்டாக் அலி டிராபி 2026-27 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

நவம்பர் 14-ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடியால் 173 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி எளிதாக எட்டியது.

தொடர்ந்து குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். 198 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி 15.4 ஓவர்களில் எட்டியது.

கோவா அணிக்கு எதிரான போட்டியிலும் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

உள்ளூர் டி20 தொடரில் தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் சூர்யகுமார் யாதவுக்கு, இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும், தற்போதைய அணிக் கட்டமைப்பில் அவருக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யகுமார் யாதவின் உள்ளூர் போட்டி செயல்பாடுகள் தொடர்ந்தாலும், இந்திய அணிக்கான தேர்வில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

X