சையத் முஷ்டாக் அலி கோப்பை: கேரளா அணியை வீழ்த்தி ஆந்திரா வெற்றி

ஆந்திரா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



சையத் முஷ்டாக் அலி கோப்பை: கேரளா அணியை வீழ்த்தி ஆந்திரா வெற்றி
Published on: 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற எலைட் பிரிவு சி லீக் ஆட்டத்தில் கேரளா – ஆந்திரா அணிகள் மோதின. மொகாலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆந்திர அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷேக் ரஷீத், ஹேமந்த் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கம் அளித்தனர். ஹேமந்த் ரெட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஷேக் ரஷீத் 39 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

ஆந்திர அணி

தொடர்ந்து களமிறங்கிய சீரம் வெங்கட ராகுல் அதிரடியில் மிரட்டினார். அவர் 30 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அஸ்வின் ஹெப்பர் 15 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதனால் ஆந்திர அணியின் ரன் வேகம் தொடர்ந்து அதிகரித்தது. குறிப்பாக 15-வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி ஓவரிலும் 19 ரன்கள் குவிக்கப்பட்டதால் ஆந்திர அணி வலுவான ஸ்கோரை எட்டியது.

இறுதியில் ஆந்திர அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேரள அணியின் பந்துவீச்சில் எம்.டி. நிதீஷ் 3 விக்கெட்டுகளையும், பிஜு நாராயணன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கார்த்திக் பி. நாயர், அப்துல் பாசித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணிக்கு 226 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

226 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய கேரளா அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். ரோகன் குன்னும்மல் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்.

கோவிந்த் தேவ் பாய் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். விஷ்ணு வினோத் 14 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் கேரளா அணி நெருக்கடியில் சிக்கியது. மறுபுறம் அப்துல் பாசித் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு முஹம்மது ஷரஃபுதீன் 27 ரன்கள் எடுத்து ஒத்துழைத்தார்.

20 ஓவர்கள் முடிவில் கேரளா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆந்திரா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆந்திரா தரப்பில் கே.வி. சசிகாந்த் மற்றும் நரசிம்ம ராஜு தலா 2 விக்கெட்டுகளையும், சத்யநாராயண ராஜு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

X