சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரியானாவிடம் தோல்வியடைந்த தமிழ்நாடு அணி

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தமிழ்நாடு அணி
Published on: 

இந்தூர்,

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அமித் சாத்விக் அதிரடி

இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன.

இருப்பினும், அமித் சாத்விக் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 38 ரன்கள் சேர்த்தார். பாலசுப்பிரமணியம் சச்சின் 28 பந்துகளில் 27 ரன்களும், ஷாருக் கான் 23 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். சாய் கிஷோர் 20 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் தமிழ்நாடு அணி 19.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அரியானா அணிக்கு எளிய வெற்றி

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணிக்கு தொடக்க வீரர் அர்ஷ் ரங்கா 18 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். யஷ்வர்தன் தலால் 21 ரன்கள் சேர்த்தார்.

அன்கித் ராஜேஷ் குமார் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 43 ரன்கள் எடுத்தார். நிஷாந்த் சிந்து 29 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் சேர்த்தார்.

இதனால் அரியானா அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ்நாடு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

X