

இந்தூர்,
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அரியானா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்களுக்கு சுருண்டுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, அரியானாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், அமித் சாத்விக் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 38 ரன்கள் சேர்த்தார்.
பாலசுப்பிரமணியம் சச்சின் 28 பந்துகளில் 27 ரன்களும், ஷாருக் கான் 23 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். சாய் கிஷோர் 20 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
மற்ற வீரர்களில் நாராயண் ஜெகதீசன் 9 ரன்களும், குர்ஜப்நீத் சிங் 3 ரன்களும், ஆர். ராஜ்குமார் 2 ரன்களும் எடுத்தனர். துஷார் ரஹேஜா, சன்னி சந்து ஆகியோர் தலா 1 ரன் எடுத்தனர்.
இதனால் தமிழ்நாடு அணி 19.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அரியானா அணி விளையாடி வருகிறது.