டி20 கிரிக்கெட்: இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து வெற்றி.!

இந்திய அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டி20 கிரிக்கெட்: இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து வெற்றி.!
Published on

பெல்பாஸ்ட்,

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்காக அயர்லாந்துக்கு சென்றுள்ளது. அதன்படி, இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடைபெற்றது.

அயர்லாந்து பேட்டிங்

சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் அய்யரை நியமித்த பிறகு இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டெக்டர் 17 ரன்னிலும், அடயர் 12 ரன்னிலும், ஹாரி டெக்டர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 51 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிரடி ஆட்டம்..

அப்போது லோர்கன் டக்கர் - டெலனி இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியை சரிவில் இருந்து மீட்டனர். டக்கர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். டெலனி 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்தியா சொதப்பல்

தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மா களமிறங்கினர். சாம்சன் 5 ரன்னிலும், கிஷன் 1 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, 20 பந்துகளில் அரைசதமடித்தார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். அத்துடன், இந்திய அணிக்கு சீரான இடைவேளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

வரலாற்று வெற்றி.!

இறுதியில் இந்திய அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரீஸ் மற்றும் மேத்யூ ஹோலர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை அயர்லாந்து அணி வீழ்த்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளதால் அயர்லாந்து வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com