

மும்பை:
ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் வழங்கப்படாதது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரைத் தொடர்ந்து, ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடர் வரும் 23, 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி, அசோக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்திய டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் ஏன் இல்லை?, இதற்கு பிசிசிஐ விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தேர்வு தொடர்பாக எந்த தகவல் பரிமாற்றமும் இல்லையென்றால், மக்கள் தாங்களாகவே பல்வேறு முடிவுகளுக்கு வந்துவிடுவார்கள். சஞ்சு சாம்சன் போன்ற வீரர் ஏன் அணியில் இல்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், "சஞ்சு சாம்சனை எளிதாக அணியில் இருந்து நீக்க முடியாது "என்றும் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங்.