டி20 உலகக்கோப்பை 2024: விராட்,பும்ரா இல்லை.. அவர்தான் 'கேம் சேஞ்சர்' - ரோகித் சர்மா பாராட்டு

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த வருடம் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. அந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது 4வது இடத்தில் களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பொதுவாக 6 அல்லது 7-வது இடங்களில் விளையாடக்கூடிய அவர் பைனலில் முன்கூட்டியே வந்து விராட் கோலியுடன் சேர்ந்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

இந்நிலையில் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தாம் பதற்றமடைந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அப்போது கோலியுடன் அசத்திய அக்சர் படேல் கேம் சேஞ்சராக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதல் ஓவரிலேயே நீங்கள் 3 பவுண்டரிகள் அடித்தால் நன்றாக தொடங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம். அன்று இந்தியாவுக்காக நீண்ட வருடங்கள் விளையாடிய அனுபவம் உதவியது. விராட் கோலியும் அன்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சிந்தித்திருப்பார் என உறுதியாகச் சொல்வேன். கடந்த காலங்களைப் பற்றி கவலைப்படாத அவர் 3 விக்கெட்டுகள் விழுந்தபோது அக்சருடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்ததால் நான் பதற்றமடைந்தேன். ஏனெனில் கடந்த கால நினைவுகள் மீண்டும் வந்தன. அதே சமயம் எங்களுடைய பின்வரிசை பேட்ஸ்மேன்களை நான் மிகவும் நம்பினேன். அத்தொடரில் அதற்கு முன்பு பெரிய ரன்கள் குவிக்காத அவர்கள் முக்கிய நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

அக்சர் பற்றி பலரும் பேசவில்லை. ஆனால் அது கேம் சேஞ்சர் ஆட்டமாகும். அந்த நேரத்தில் 47 ரன்கள் அடித்தது முக்கியமானது. முழுவதுமாக விளையாட வேண்டிய வேலையை விராட் அபாரமாக செய்தார். பின்னர் துபே, பாண்ட்யாவும் தங்களுடைய பங்கை ஆற்றினார்கள். அந்த வெற்றி என்னுடைய கெரியரில் மிகவும் சிறந்த தருணமாகும். அதற்கு முந்தைய ஐ.சி.சி. தொடர்களில் வெற்றியை நெருங்கிய நாங்கள் இதயங்களை உடைக்கும் தோல்வியை சந்தித்தோம். அதனாலேயே அந்த வெற்றி ஸ்பெஷலானது. அதனாலேயே அனைத்து வீரர்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com