

ஆமதாபாத்
டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களில் அமைதியாக, அதேவேளையில் அதிரடியாக விக்கெட்டுகளை கைப்பற்றும் திறமை வாய்ந்தவராக வருண் சக்ரவர்த்தி செயல்பட்டு வருகிறார். அவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.
கடந்த 18 மாதங்களாக டி20 போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதில் வருண் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த போட்டியில் விக்கெட் இல்லாமல் திரும்புவார் என பார்க்கப்பட்ட நிலையில், டேவிட் மில்லரின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். மில்லர் 63 ரன்கள் எடுத்தபோது அந்த விக்கெட்டை வருண் கைப்பற்றினார். இதனால், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மில்லர் அரை சதத்துடன் திரும்பினார்.
இந்த விக்கெட்டை கைப்பற்றி, 18 போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியவராக வருண் இருக்கிறார். இந்த வரிசையில், போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது தொடர்ந்து கைப்பற்றி வரும் அர்ஷ்தீப் சிங்கை (17) அவர் முந்தியுள்ளார்.
இந்த பட்டியலில் சந்தீப் லாமிச்சானே (26), வனிந்து ஹசரங்கா (23) மற்றும் அடில் ரஷீத் (21) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். தொடர்ந்து வருண் இதுபோன்று விளையாடினால் ரஷீத்துக்கு போட்டியாக வருவதுடன், அவரை பின்னுக்கு தள்ளி விட்டு டாப் 3-க்குள் வரும் வாய்ப்பு உள்ளது.