

கொழும்பு,
இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை அணி தற்போது 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா டிக்ளேர் செய்ததைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணிக்கு தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும், பின்னர் சோனல் தினுஷா சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 137 பந்துகளில் 86 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு லஹிரு குமாரா 50 பந்துகளில் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து பெரிய முன்னிலை பெற இந்திய அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருப்பதால், இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் நிலையில் இந்திய அணி உள்ளது.