

சென்னை,
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்தி ருந்தது. கேப்டன் சுப்மன் கில் (103 ரன்), ரிஷப் பண்ட் (50 ரன்) களத்தில் இருந்தனர்.
இப்போட்டியின் 2-வது நாளில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 564 ரன்கள் குவித்த இந்தியா, தேநீர் இடைவேளைக்கு முன்பாக இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களும், ரிஷப் பண்ட் 81 ரன்களும் விளாசினர். பின்னர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். அறிமுக வீரர் மானவ் சுதர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 451 ரன்கள் பின்தங்கியநிலையில், இன்று ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மத் ஷா களத்தில் இருந்தனர். அப்போது ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அஸ்மத்துல்லா உமர்சாய் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஷரபுதீன் அஷ்ரப் களமிறங்கியநிலையில், மறுபுறம் நிதானமாக ஆடிய ரஹ்மத் ஷா தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இதையடுத்து ஷரபுதீன் அஷ்ரப் 11 ரன்களிலும், அரைசதம் விளாசிய ரஹ்மத் ஷா 60 ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மானவ் சுதார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான், 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் செய்யப்பட்டு தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.