தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: மெஹிதி ஹசன், ஜேக்கர் அரைசதம்.. வங்காளதேச அணி முன்னிலை

வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ளது.
image courtesy: twitter/ @ICC
image courtesy: twitter/ @ICC
Published on

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரியன்னே 114 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 202 ரன்கள் பின்னிலையுடன் வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆரம்ப கட்டத்தில் தடுமாறியது. இருப்பினும் மெஹிதி ஹசன் மிராஸ் - ஜேக்கர் அலி இணை கை கோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டு முன்னிலை பெற உதவினர்.

அந்த அணி 3-வது நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் அடித்திருந்தபோது மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன் கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜேக்கர் அலி 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

வங்காளதேச அணி இதுவரை 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com