டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த ஹாரி புரூக் - ஜேமி சுமித் ஜோடி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹாரி புரூக் மற்றும் ஜேமி சுமித் இருவரும் சதமடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த ஹாரி புரூக் - ஜேமி சுமித் ஜோடி
Published on

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜோ ரூட் (22 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் சிராஜ் காலி செய்தார். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஹாரி புரூக் - ஜேமி சுமித் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடியில் இருவரும் சதமடித்து அசத்தினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது. அத்துடன் இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை கடந்து செல்கிறது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 6-வது விக்கெட் அல்லது அதற்கும் கீழே 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இங்கிலாந்து ஜோடி என்ற வரலாற்று சாதனையை ஹாரி புரூக் - ஜேமி சுமித் கூட்டணி படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஜோ ரூட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் கூட்டணி 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

தற்போது வரை இங்கிலாந்து அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் அடித்துள்ளது. ஹாரி புரூக் 113 ரன்களுடனும், ஜேமி சுமித் 134 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com