டெஸ்ட் கிரிக்கெட்: ஜேமி சுமித் மகத்தான சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜேமி சுமித் இந்த சாதனையை படைத்துள்ளார்.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போப் 24 ரன்களிலும், புரூக் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் கைகோர்த்த பென் ஸ்டோக்ஸ் - ஜேமி சுமித் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 184 ரன்கள் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2-வது இன்னிங்சில் 22 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் (184+22 = 206 ரன்கள்) அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.

அந்த பட்டியல்:

1. ஜேமி சுமித் - 206 ரன்கள்*

2. அலெக் ஸ்டீவார்ட் - 204 ரன்கள்

3. ஜானி பேர்ஸ்டோவ் - 199 ரன்கள்

4. ஆலன் நாட் - 197 ரன்கள்

தற்போது வரை இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ஸ்டோக்ஸ் 32 ரன்களுடனும், ஜேமி சுமித் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com