தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வில்லியம்சன் அபார சதம் - வலுவான நிலையில் நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 528 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Image : AFP 
Image : AFP 
Published on

மவுண்ட் மவுன்கானுய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களும், வில்லியம்சன் 118 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் அந்த அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர்.நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கைல் ஜாமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.349 ரன்கள் முன்னிலை பெற்றும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கத்தில் டாம் லேதம் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டேவான் கான்வே 29 ரன்களுக்கும் , ரச்சின் ரவீந்திரா 12 ரன்களுக்கும் வெளியேறினார்.

விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய அவர் சதம் அடித்து அசத்தினார் .தொடர்ந்து 109 ரன்களுக்கு வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நீல் பிராண்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ருவான் டி ஸ்வார்ட், டேன் பேட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி தற்போது 528 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com