வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 187 ரன்னில் ஆல்-அவுட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 187 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 187 ரன்னில் ஆல்-அவுட்
Published on

லக்னோ,

வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இது ஆப்கானிஸ்தானுக்கு உள்ளூர் ஆட்டம் போன்றதாகும். அதாவது ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சம் மற்றும் தரமான கிரிக்கெட் ஸ்டேடியங்கள் இல்லாததால் அங்கு நடக்க வேண்டிய போட்டிகளை இந்தியாவில் நடத்திக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த டெஸ்டில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சுழற்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

இதன் பிறகு 140 கிலோ எடை கொண்ட சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வாலின் சுழலில் சிக்கி ஆப்கானிஸ்தான் அணியினர் திண்டாடினர். மேற்கொண்டு 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 68.3 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜாவித் அகமதி 39 ரன்களும், அமிர் ஹம்சா 34 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரஷித்கான் 1 ரன்னில் ஏமாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரகீம் கார்ன்வால் 25.3 ஓவர்கள் பந்துவீசி 5 மெய்டனுடன் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். 1971-ம் ஆண்டுக்கு பிறகு முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்தபந்து வீச்சாக இது பதிவானது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. கிரேக் பிராத்வெய்ட் (11 ரன்), ஷாய்ஹோப் (7 ரன்) சுழற்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். ஜான் கேம்ப்பெல் 30 ரன்களுடனும், ஷமார் புரூக்ஸ் 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com