அண்ணனை போன்ற அவர் கொடுத்த ஆலோசனைதான் நான் முன்னேற காரணம் - ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி


அண்ணனை போன்ற அவர் கொடுத்த ஆலோசனைதான் நான் முன்னேற காரணம் - ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி
x

image courtesy:PTI

தினத்தந்தி 2 Sept 2025 9:08 PM IST (Updated: 2 Sept 2025 9:12 PM IST)
t-max-icont-min-icon

இந்த வருட ஐ.பி.எல்.-ல் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார்.

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

குறிப்பாக பினிஷிங் ரோலில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 261 ரன்களை 176 என்ற அதிரடியான ஸ்டிரைக்ரேட்டில் குவித்தார். இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பலரும் தம்முடைய பலவீனம் அல்லது தடுமாறும் விஷயங்களில் முன்னேறுமாறு அறிவுறுத்தியதாக ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார். ஆனால் அண்ணனை போன்ற விராட் கோலி மட்டுமே தம்முடைய பலத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் ஒரு சிறிய ஊரில் இருந்து வந்தவன், அங்கு மூத்தவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது. நீங்கள் சீனியர்களின் சொந்த வாழ்வில் ஊடுருவக்கூடாது. என்னைப் பொறுத்த வரை விராட் கோலியிடம் பேசுவதே பெரிய விஷயம். விராட் பையாவின் உயர்ந்த நிலையை நான் அறிவேன். அதனால் அவரது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாமல் அல்லது அவரை தேவையில்லாமல் தொந்தரவு செய்யாமல் இருக்க முயற்சிப்பேன்.

நான் அவரிடம் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசுவேன். மரியாதையின் காரணமாக அவருடன் ஒரு இடைவெளியை கடைப்பிடித்து அர்த்தமுள்ள பேச்சுக்களை மட்டுமே பேச விரும்புகிறேன். மற்றவர்கள் எனக்கு என்ன குறை இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் அவர் என் பலத்தை மேம்படுத்தி, என் விளையாட்டில் எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தினார். இது நான் முன்னேறுவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் எனக்குக் கொடுத்த தன்னம்பிக்கையால் களத்தில் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பது என்னுடைய கடமை என்று நான் உணர்ந்தேன்.

அவர் எனக்கு ஒரு அண்ணனைப் போன்றவர். என் வாழ்க்கையில் இந்த அண்ணனை தாமதமாகக் கண்டுபிடித்தேன். ஆனால் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவுரைகளை நான் எந்தக் கேள்வியும் கேட்காமல் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story