

மும்பை,
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேபோல் ஹர்திக் தலைமையில் மும்பை அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை.
இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றுவது தொடர்பாக இரு அணி நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படும்நிலையில், தற்போது இந்தப் பரிமாற்றத்துக்கு இரு அணிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதன்படி, ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற உள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா அணியிலிருந்து வெளியேற உள்ள நிலையில், 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவின் பரிமாற்றமும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது மும்பை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.