3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

புலவாயோ,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட போட்டி புலவாயோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 626 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் (334 பந்து, 49 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்த நிலையில் களத்தில் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43 ஓவர்களில் 170 ரன்னில் ஆல்-அவுட் ஆகி, 'பாலோ-ஆன்' ஆனது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 83 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுப்ரயென் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பாலோ-ஆனுக்கு தள்ளப்பட்டதால் ஜிம்பாப்வே அணி 456 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 51 ரன்கள் அடித்திருந்தது.

இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்த இன்னிங்சிலும் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் நிக் வெல்ச் (55 ரன்கள்), கிரெய்க் எர்வின் (49 ரன்கள்) மற்றும் கைடானோ தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 77.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 220 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் ஓயிட்வாஷ் ஆக்கியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளும், செனுரன் முத்துசாமி 3 விக்கெட்டுகளும், கோடி யூசுப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com