உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று வெற்றியுடன் தொடங்குமா வெஸ்ட்இண்டீஸ் அணி

வெஸ்ட்இண்டீஸ் அணி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை சந்திக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று வெற்றியுடன் தொடங்குமா வெஸ்ட்இண்டீஸ் அணி
Published on

ஹராரே,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. தரவரிசையில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை. எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நேற்று முன்தினம் ஜிம்பாப்வேயில் தொடங்கியது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், சாமுவேல்ஸ், பிராத்வெய்ட் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ரோஹன் முஸ்தபா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை வென்ற உத்வேகத்துடன் களம் காணுகிறது. அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வெஸ்ட்இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்ற லீக் ஆட்டங்களில் ஹாங்காங்-ஸ்காட்லாந்து, அயர்லாந்து-பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com